வீரத்திற்கு பெயர்போன நெல்லைச் சீமை பல மன்னர்கள் ஆண்ட பாரம்பரிய பூமி. அப்படிபட்ட நெல்லை சீமையின் தற்போதைய கம்பீர அடையாளமாக வாழ்ந்துவந்தவர் சிங்கம்பட்டி ஜமீன்தார் திரு. முருகதாஸ் தீர்த்தபதி.
இந்தியாவில் மிக இளவயதில் (மூன்றரை வயதில்) ஜமீன்தாரான இவர், தற்போது தென்னிந்தியாவின் கடைசி ஜமீன்தாராக வாழ்ந்து மறைந்திருக்கிறார்.
செழிப்பான சிங்கம்பட்டி ஜமீன்:
சிங்கம்பட்டி ஜமீன் என்பது நெல்லை மாவட்டத்தின் செழிப்புமிக்க பகுதியாக விளங்கும் பாபநாசம், அம்பாசமுத்திரம் வட்டாரத்தை உள்ளடக்கிய ஒரு குறுநிலப்பகுதி. தாமிரபரணி நதியின் பிறப்பிடமான பொதிகை மலை இந்த ஜமீனுக்குள் தான் அமைந்திருந்தது. இந்த பகுதியை ஆயிரமாண்டு பாரம்பரியம் கொண்ட சிங்கம்பட்டி ராஜ வம்சத்தினர் தலைமுறை தலைமுறையாக ஆண்டு வந்துள்ளனர்.
கால மாற்றத்தால் கொண்டுவரப்பட்ட ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டத்தால் சிங்கம்பட்டி ஜமீன் ஆளும் அதிகாரத்தை இழந்தது. எனினும் அச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே முருகதாஸ் சிங்கம்பட்டி ஜமீனுக்கு ராஜாவாக முடிசூட்டப்பட்டார்.
ராஜா தீர்த்தபதி :
T.M.S திர்த்தபதி என்றழைக்கப்படும் முருகதாஸ் ஆங்கிலேயர்களுடன் சமமாக பழகி வளந்தவர். இதனால் ஆங்கிலத்தில் பலே கில்லாடி.! அது தவிர ஆங்கிலேயர்களின் நடனமான பலே நடனமும் இவருக்கு அத்துபடி. வீரக் கலைகள் பலவும் கற்றுத் தேர்ந்த ராஜாவாக தீர்தத்தபதி வாழ்ந்து வந்தார்.
மக்களை கவர்ந்த மன்னர்:
என்ன தான் ராஜ குடும்பத்து வாரிசாக இருந்தாலும், தனது குணத்தால் அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மையுடையவராக அறியப்பட்டிருந்தார் முருகதாஸ் தீர்த்தபதி.
ஆண்டு தோறும் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ராஜ உடையில் வந்து மக்கள் முன்பு தோன்றுவார். மேலும் அம்பை தீர்த்தபதி பள்ளி மற்றும் கலைக்கல்லூரியின் நிர்வாக குழு தலைவராகவும் பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில் எதிர்ப்பாராத வகையில் ராஜா முருகதாஸ் தீர்த்தபதி காலமாகியிருக்கிறார்.
ஜமீன்தாரின் இறப்பு செய்தி நெல்லை மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல்வாதிகள் முதல் திரை நட்சத்திரங்கள் வரை பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டு வருகிறார்கள்.
பாரம்பரிய நெல்லை மண்ணும், தனது கடைசி ராஜாவை இழந்த கவலையில் கண்ணீர் சிந்துகிறது..
Comments
Post a Comment