கேரள எல்லை இனி நெல்லையிடம் இல்லை:
கேரள மாநிலத்தோடு சாலை வழி எல்லையை பகிர்ந்து கொள்ளும் வெகு சில மாவட்டங்களுள் ஒன்றாக நம் நெல்லை இருந்துவந்தது. தென்காசியின் பிரிவால் இனி எல்லை நம்மிடம் இருக்கப்போவதில்லை. பார்டர் புரோட்டா கடையும் தென்காசி மாவட்டத்துக்காரரின் கடையாகி விட்டது!
வீரபூமியின் பெயர் மாறிவிட்டது:
கட்டபொம்மனையும் பாரதியையும் தூத்துக்குடி எடுத்துக் கொண்டது போல வாஞ்சிநாதனையும்,பூலித்தேவனையும் தென்காசி எடுத்துக் கொண்டுவிட்டது.
குற்றாலம் இனி அண்டை மாவட்ட சுற்றுலாத் தலம்:
"நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டுகிறது" என்று இனி எந்தப் பத்திரிகையும், செய்திச் சொல்லப்போவதில்லை. பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கும் தென்காசி மாவட்டம் செங்கோட்டைக்கும் இயக்கப்படும் ரெயிலாக மாறிவிட்டது.
திருமங்கலம் - செங்கோட்டை நான்கு வழிச்சாலை பிரச்னை இனிமேல் தென்காசி மாவட்டத்தின் பிரச்னை.
நகரங்களை இழந்த நெல்லை:
பழைய நெல்லை மாவட்டத்தில் நம் நெல்லைக்கு அடுத்து பெரிய நகரங்களாக இருந்த சங்கரன்கோவிலும், கடையநல்லூரும் தென்காசியோடு இணைந்துள்ளது இழப்பு தான் நமக்கு. பிற நகரங்களான புளியங்குடியும் செங்கோட்டையும் அங்கு தான் போயிருக்கிறது.
தமிழ்நாட்டிலேயே அதிகமாக மேற்கு தொடர்ச்சி மலை படர்ந்திருக்கும் மாவட்டம் என்ற பெயரும் நம்மிடமிருந்து போயிருக்கிறது.
நெல்லைக்கே அல்வா:
சொக்கம்பட்டி அங்கு இணைந்துவிட்டதால் திருநெல்வேலிக்கே அல்வா கொடுத்த மாவட்டமாக தென்காசி மாறியிருக்கிறது.
வரமாட்டேன் என அழுது அடம்பிடித்த ஆலங்குளத்தையும் சங்கரன்கோவிலையும் தனது அதிகாரத்தால் தென்காசியோடு சேர்த்து வைத்துள்ளது அரசாங்கம்.
நிகழ்கால அரசியல் ஆளுமை வைகோ இனி தென்காசி மாவட்டத்துக்காரர் என்று அழைக்கப்படுவார். அமைச்சர் தொகுதியான சங்கரன்கோவிலை நாம் இழந்துவிட்டதால் அமைச்சர்களில்லாத மாவட்டமாக மாறி நிற்கிறோம்.!
இருந்தாலும் பரவாயில்லை..
பிரிவின் வலி தான் கொடியது.
இது பிரிவல்ல பிரசவம்..!
நம் நெல்லைக்கு இன்னொரு குழந்தை பிறந்திருக்கிறது.
ஆம்,
அதன் பெயர் தென்காசி.!
Comments
Post a Comment