இந்தியாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையமான நம் நெல்லை கூடங்குளம் அணுமின்நிலையத்தில் நாட்டின் முதல் அணுக்கழிவு மையத்தை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு அளித்திருந்த வாக்குறுதியின் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அணுக்கழிவு மையம் என்றால் என்ன?
அணுமின்நிலையங்களில் மின்சாரம் தயாரிக்கப்பட்ட பிறகு மிஞ்சும் பொருள்களே அணுக்கழிவுகள் எனப்படுகின்றன. இந்தக் கழிவுகள் அதிக கதிர்வீச்சு அபாயம் கொண்டவையாகும்.
உலகின் பல நாடுகளில் இந்தக் கழிவுகள் அணுமின்நிலையங்களிலேயே சேமிக்கப்படுகின்றன. இந்திய அணுமின் நிலையங்களிலும் இதே வழியில் தான் கழிவுகள் கையாளப்பட்டு வருகின்றன. கூடங்குளத்திலும் இதுவரை இந்த முறையிலேயே கழிவுகள் கையாளப்பட்டு வந்தன.
ஆனால் கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் நடந்த வழக்கில் அணுக்கழிவு மையத்தை 2022 ம் ஆண்டுக்குள் அமைப்பதாக இந்திய அரசு வாக்குறுதி தந்தது.
அணுமின்நிலையத்திலேயே கழிவுகளை கையாள்வதை விட தனியாக கழிவு மையம் அமைத்து சேமிப்பது பாதுகாப்பது தான். எனினும் பிரச்னை அதுவல்ல..!
என்ன ஆபத்து:
நீதிமன்றத்தில் இந்திய அரசு தந்த வாக்குறுதியில் அணுக்கழிவு மையம் அமைக்கும் தொழில்நுட்பம் இந்தியாவிடம் இல்லை என்று கூறியிருந்தது. முழுமையாக தொழில்நுட்பம் இல்லாத நிலையில் அமைக்கப்படும் இந்த மையம் எப்படி பாதுகாப்பாக இருக்கும் என்பதே நெல்லை மக்களின் அச்சத்திற்கு காரணம்.
குப்பைக் கூளமாகும் நெல்லை.?
அணுஉலைக்கழிவுகளை சேமிக்கும் மையம் நம் நெல்லையில் அமைந்தால் அங்கு கூடங்குளம் தவிர பிற அணுஉலைக் கழிவுகளும் கொட்டப்படும் அபாயம் உள்ளது. இதனால் இந்தியாவின் ஆபத்துமிக்க குப்பைக்கூளமாக நெல்லை உருமாறும் ஆபத்து இருக்கிறது. மேலும் நாளை ஏதேனும் ஒரு அசம்பாவிதம் நடந்தால் தென்தமிழகமே நிர்மூலமாகும் நிலையும் ஏற்படும்.
இதுநாள் வரை கேரளாவின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் இடமாக இருந்து வந்த நெல்லை இப்போது அணுக்கழிவுகளின் கூடாரமாக மாறப்போகிறது.
என்னசெய்வதென்றே தெரியாமல் திகைத்து நிற்கிறார்கள் திருநெல்வேலி மக்கள்.!
Comments
Post a Comment