நெல்லை - 2017.
பரபரப்பான நிகழ்வுகளுக்கு நம்ம திருநெல்வேலியில் என்றுமே பஞ்சம் இருக்காது . விரைவில் விடைபெறவுள்ள 2017ம் ஆண்டிலும் நம் திருநெல்வேலி பல நேரங்களில் தலைப்புச் செய்தியானது. அதில் மிக முக்கியமான ஐந்து நிகழ்வுகளை வரிசைப்படுத்தி உங்களுக்காக கீழே அளித்துள்ளோம்.
5. இந்திய அணியில் இடம்பெற்ற ஓர் நெல்லையன்.
திரு. விஜய் சங்கர் |
உலகின் தலைசிறந்த கிரிக்கெட் அணியான இந்திய அணியில் நம் நெல்லையை சேர்ந்த விஜய் சங்கர் இந்தாண்டு இடம்பிடித்து பிறந்த நெல்லை மண்ணுக்கு பெருமை சேர்த்தார்.
4. பேய் மழையைப் பெற்ற நெல்லை மாவட்டம்.
பொங்கி பாயும் தாமிரபரணி |
இந்தாண்டு நம் நெல்லை மாவட்டம் வரலாறு காணாத மழையை பெற்றது. குமரிக் கடல் பகுதியில் உருவான ஒக்கி புயல், நெல்லை மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் பெரு மேகவெடிப்புகளை நிகழ்த்தியது. திருநெல்வேலி மாவட்ட வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக சுமார் 45 செ.மீ மழை ஒரே நாளில் பாபநாசத்தில் கொட்டித் தீர்த்தது.இதைத் தொடர்ந்து, தாமிரபரணியும் பெருக்கெடுத்தது.
3. ஜல்லிக்கட்டுக்காக களம் கண்ட நெல்லை.
ஜல்லிக்கட்டு போராட்டம் |
நம் தமிழர்களின் பண்பாட்டு பொக்கிஷமான ஜல்லிக்கட்டை சூழ்ச்சிகளில் இருந்து விடுவிக்க உலகெங்கிலும் போராட்டங்கள் நடந்தது. சிங்காரச் சென்னையில் நடந்த மெரினாப் புரட்சி டெல்லியை அலற வைத்தது. அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில், நம் நெல்லை இளைஞர்கள் பாளை வ.உ.சியில் திரண்டு வீர விளையாட்டை மீட்க வீரமுழக்கமிட்டு வரலாறு படைத்தனர்.
2. இரு விருதுகளையும் தட்டிச் சென்ற நெல்லை.
நெல்லை மாநகராட்சி அலுவலகம் |
2017 ம் ஆண்டு நெல்லை மாநகராட்சிக்கு மறக்க முடியாத ஆண்டு. ஏனெனில், சிறந்த மாநகராட்சிக்கான விருதை ஒரே ஆண்டில் மத்திய அரசிடமும், மாநில அரசிடமும் நம் நெல்லை பெற்றது. புதன் கிழமை தோறும் பிலாஸ்டிக் கழிவுகளை பெறும் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியமைக்காக மத்திய,மாநில அரசுகள் சேர்ந்து நம் நெல்லையை கவுரவித்தன.
1. இந்தியாவையே உலுக்கிய கூட்டுத் தற்கொலை.
கொழுந்துவிட்டு எரியும் உயிர்கள் |
கந்துவட்டிக் கொடுமை தாளாமல் ஒரு குடும்பமே நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் தீயிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்தியா முழுமைக்கும் அதிர்வலைகளை உண்டாக்கியது. மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கைகள் குறித்து சர்ச்சைகள் எழுப்பப்பட்டன. கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரிக்க இக் கொடூர நிகழ்வு வழிவகுத்தது. நெல்லை வரலாற்றில் நீங்கா வடுவாகவும் இந்நிகழ்வு இடம் பெற்றது.
Comments
Post a Comment