தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என்ற பெருமை நம் திருநெல்வேலிக்கு உண்டு. நெல்லையின் பாளையங்கோட்டை கல்லூரி,பள்ளிகளுக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு நகரம். தென்தமிழகம் இன்று அடைந்திருக்கும் கல்வி வளர்ச்சியில் பாளையங்கோட்டைக்கு மிக முக்கிய பங்கு உண்டு. நெல்லையின் பட்டதாரிகள் இன்று உலகம் முழுதும் செல்வாக்கு மிக்க இடத்தில் அமர்ந்துள்ளனர்.
சில ஆண்டுகள் முன்பு வரை அறவே தொழில் வளர்ச்சி இல்லாத நிலை நெல்லையில் தற்போது மாறிவருகிறது. அருகே தூத்துக்குடி மிதமான தொழில் வளர்ச்சியை கண்டு வருகிறது. நெல்லையிலும் தொழில் துறை அரும்பத் தொடங்கியுள்ளது. இதற்கு ஏற்ப உட்கட்டமைப்பு,மனிதவளம் உள்ளிட்டவையும் நம்மிடம் சிறந்த வகையில் உள்ளது.
தேவை ஐஐடி, என்ஐடி:
கல்வி ரீதியில் பல்கலைக்கழகம், கல்லூரிகள் பல திருநெல்வேலியில் அமைந்திருந்தாலும் இந்திய அரசின் கல்வி நிறுவனம் நெல்லையில் இல்லாதது பெரும் குறையாக உள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் உள்ளூரில் தரம் வாய்ந்த கல்வி கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். அதுவும் தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு நகரில் ஒரு இந்திய அரசு கல்வி நிறுவனமும் இல்லாதது பெரும் போதாமையாக உள்ளது.
எதிர்காலத்தில் தென்மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி பெற்றால் மிகச் சிறந்த தொழில் வல்லுநர்கள் தேவைப்படுவார்கள். அத்தகையவர்களை உருவாக்கும் வல்லமை படைத்த கல்வி நிலையங்கள் இங்கு அமைந்தால் அது மிகவும் எளிதாகும்.
எனவே ஐஐடி,என்ஐடி போன்ற கல்வி நிறுவனங்களை நம் திருநெல்வேலியில் துவங்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நெல்லை மக்களின் எதிர்பார்ப்பு.
Comments
Post a Comment