Skip to main content

நெல்லை ஏன் ஸ்பெஷல் ...?


   


     நம் தமிழகம் பழமைக்கும் பாரம்பரியத்துக்கும்  பெயர்போன மாநிலம். அதற்கு சான்றாக நாம் பலவற்றை  சொல்லலாம். அனால் அவற்றுள் தனித்துவத்தோடு திகழ்வது ஒரு சில மட்டுமே. அந்த ஒரு சிலவற்றுள் ஒன்றுதான் நம் நெல்லை மாநகரம். தமிழகத்தில் பல நகரங்கள் இருக்க நம் நெல்லை மட்டும் ஏன் ஸ்பெஷல் ..? பார்ப்போம் வாருங்கள்...

நெல்லை :
    
திருநெல்வேலி, திருநவேலி  என்று தமிழர்களாலும் , தின்னெவெளி (TINNEVELLY) என்று ஆங்கிலேயர்களாலும்  அழைக்கப்படும் இந்நகரம் தமிழகத்தின் ஐந்தாவது பெரிய நகரம்.  தலைநகர் சென்னையிலிருந்து 625 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்நகரம் வயல்வெளிகளையே  வேலியாக கொண்டதத்தால் இப்பெயர் பெற்றது.  சரி வரலாற விட்டுட்டு நம் நெல்லை ஏன் ஸ்பெஷல்ங்கிறத  பாப்போம்.

தாமிரபரணி:

தாமிரபரணி
     திருநெல்வேலிக்குனு எத்தனையோ பெருமைகள் இருந்தாலும் அத்தனை பெருமைகளுக்கும் காரணம் தாய் தாமிரபரணி தாங்க. பொதிகை மலைல பிறந்து நெல்லை தூத்துக்குடியை செழிக்க வைக்கிற தெய்வம். உலகத்தில் உள்ள எல்லா  நதிகளும் மக்களின் பாவத்தை போக்விட்டு, தன்  பாவத்தை தாமிரபரணியிடம் வந்து போக்கிக்கொள்வதாக புராணங்கள் கூறுகின்றன.  இந்த தண்ணியோட  ருசிக்கு எந்த தண்ணியும் ஈடாகாது. திருநெல்வேலி அல்வா தொடங்கி இம்மக்களோட வீரம்  வரைக்கும் இந்த தண்ணி தான் காரணம்.

திருநெல்வேலி அல்வா :

   
இருட்டுக்கடை , திருநெல்வேலி
திருநெல்வேலிக்கு பெருமை சேக்குற இன்னொரு விஷயம் அல்வா. உலகத்துல எத்தனையோ வகையில அல்வா இருக்கலாம். ஆனா திருநெல்வேலி அல்வா எல்லாத்தையும் தூக்கி சாப்ட்ரும். அதே போல திருநெல்வேலிலயும் எத்தனையோ  அல்வா கடைகள் இருக்குது. ஆனா நெல்லையப்பர் கோவில் வாசல்ல இருக்குற இருட்டுக்கடை அல்வா கடைக்கு இருக்குற மவுசு யாருக்கும் இல்லை. அந்த கடைல நூறு அல்வாவை வாங்கி நெல்லையப்பர் கோபுரத்தை பாத்துக்கிட்டே சாப்பிடும் சுகமே தனி...!

திருநெல்வேலி தமிழ் :

    தமிழகத்தில் பல வட்டார வழக்குகள் புழக்கத்தில் இருக்கின்றன. மதுரை, கோவை, சென்னை,  குமரி  என்று பல பகுதி மக்களால் அவைகள்  பேசப்படுகின்றன. அவைகளை விட நெல்லை, தூத்துக்குடி வட்டார பகுதிகளில் புழங்கும் தமிழ்  தனித்துவம் வாய்ந்தது. அண்ணாச்சி, மக்கா, தொடங்கி ஏல போன்ற சொற்கள் நெல்லை தமிழை முல்லைத் தமிழாக்குகின்றன. நெல்லைத்தமிழ் பேசுவோரின் வார்த்தைகளிலும், குணத்திலும் அன்பும் வீரமும் பொங்கி வழிவதை காண முடியும்.

OXFORD நகரம்:

     நெல்லை பாளையங்கோட்டை தென்னிதியாவின் 'OXFORD' என்று புகழப்படுகிறது. சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாகவே கல்விப்பணியில் தமிழகத்திலேயே சிறந்து விளங்கியது இந்நகரம். இன்றும் சாலை தோறும் கல்விச்சாலைகளை இங்கு காண முடியும். ஒரு நகரத்தில் பள்ளி கல்லூரிகள் இருப்பது இயல்பு. அனால் பள்ளி கல்லூரிகளுக்காகவே ஒரு நகரம் இருப்பது இங்கே நெல்லையில் தான்,..!

சுற்றுலா:

    
குற்றாலம்.
நெல்லை மாநகர, மாவட்ட மக்கள் கொடுத்து வைத்தவர்கள். ஏனென்றால், திருநெல்வேலி யில் இருந்து எந்த திசையில் சென்றாலும் வெறும் 50 கிலோ மீட்டர்  தூரத்தில் ஒரு  சுற்றுலா தளம் வந்துவிடும்.  உதாரணத்திற்கு , 
கிழக்கே - திருச்செந்தூர் .
மேற்கே - பாபநாசம்,குற்றாலம்.
தெற்கே - கன்னியாகுமரி (89 km).
வடக்கே - கழுகுமலை.
இப்படி சுற்றி சுற்றி சுற்றுலா தலங்களை கொண்டதாக விளங்குகிறது நெல்லை மாவட்டம்.

ஆன்மீக தலங்கள் :

    
குறுக்குத்துறை
புண்ணிய நதி தாமிரபரணி  பாயும் பூமி ஆதலால் புண்ணிய தலங்களுக்கு நெல்லை மாவட்டத்தில் பஞ்சமில்லை. நவ கைலாச கோவில்கள் நெல்லை மாவட்ட தாமிரபரணி கரையோரம் வரிசையாக  அமைந்திருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் நூற்றுக்கணக்கான பழம்பெரும் கோவில்கள், தொன்மையான கிருஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள் என்று ஆன்மீக மனம் நெல்லை பிராந்தியம் முழுவதும் வீசிக்கொன்டே இருக்கிறது. 

நீங்களே சொல்லுங்கள்...!

   இப்படி எத்தனையோ பெருமைகளுக்கு சொந்தக்காரர்கள் தான் திருநெல்வேலி மக்கள். இன்றும், உழைப்புக்கு பெயர் போனவர்கள், அன்புக்கு பாத்திரமானவர்கள் , ஆதரவு கரம் நீட்டுபவர்கள்  என்று தமிழகம் அவர்களை கொண்டாடுகிறது, பாராட்டுகிறது ..!

இப்போ சொல்லுங்க, திருநெல்வேலி ஸ்பெஷல் தானே.....?




     



Comments

Popular posts from this blog

அடுத்தது தென்காசியா இல்ல சங்கரன்கோவிலா.?

பரப்பரளவில் தமிழ்நாட்டின் மிகப் பெரிய மாவட்டமாக திகழ்ந்த விழுப்புரம் நேற்று பிரிக்கப்பட்டது.  நாடாளுமன்றத் தொகுதியாக திகழும் கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் மலரவுள்ளது. இனி நெல்லை தான் No.1. இதனால் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டமாக நம் நெல்லை உருவெடுத்துள்ளது. 6250 ச.கீ பரப்பளவை நெல்லை மாவட்டம் கொண்டுள்ளது. வடமேற்கே சிவகிரி தொடங்கி தென்கிழக்கே கூடங்குளம் வரை பரந்து விரிந்து வியாபித்து கிடக்கிறது நம் மாவட்டம். திருநெல்வேலியும் துண்டாக வாய்ப்பு! ஆனால், இந்த முதலிடம் இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்ற எண்ணமும் தற்போது எழுந்துள்ளது. ஆம். இதற்கு முன்னர் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக பிரித்து வந்துள்ளது தமிழக அரசு.. அந்த வரிசையில் நம் நெல்லையும் விரைவில் இரண்டாக பிரக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தென்காசியா சங்கரன்கோவிலா? வருங்காலத்தில் நம் நெல்லையும் இரண்டாக பிரிக்கப்படும் பட்சத்தில் புதிய மாவட்டம் தென்காசியா அல்லது சங்கரன்கோவிலா.? என்ற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. தென்காசி : *ஏற்கனவே ...

அடுத்த 18 மாதங்களுக்கு மூடப்படுகிறது ஜங்ஷன்.!

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பெரியார் பேருந்து நிலையம் அதிநவீனமாக மாற உள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் பத்து நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் அடுத்த 18 மாதங்களுக்கு ஜங்ஷன் பஸ் நிலையம் மூடப்படுகிறது. "திடீர்" பேருந்து நிலையங்கள் தயார்: அதற்கு பதில் திருநெல்வேலி மாநகரமெங்கும் 5 பேருந்து நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நெல்லை ஆட்சியர் ஷில்ஃபா வெளியிட்டுள்ளார். உங்க ஊருக்கு எங்க பஸ் ஏறனும்? 1. டவுண் நயினார்குளம் : பேட்டை,சுத்தமல்லி,சேரன்மகாதேவி, பழையப்பேட்டை பேருந்துகள் 2. டவுண் சந்தி பிள்ளையார் முக்கு பாளை.மற்றும் மானூர் பேருந்துகள். 3. அருணகிரி தியேட்டர் நிலையம்: சங்கர் நகர்,தென்கலம்,கங்கைகொண்டான். 4. பாளை பஸ் நிலையம்: N.G.O காலனி,நாங்குநேரி. 5. பாளை நேரூஜி கலையரங்க நிலையம்: கே.டி.சி நகர்,சாந்தி நகர் முதலிய இடங்கள். (*ஆம்னி பேருந்து நிலையத்தின் அமைவிடம் இன்னும் முடிவாகவில்லை) அவதி ஆரம்பம்! எப்போதும் பரபரப்பாய் இருக்கும் ஜங்ஷன் அடுத்த ஒன்றரை வருஷத்துக்கு களையிழந்து கிடக்கப் போகிறது. ஜங்ஷன் இல்லாமல் ...

அசுர வளர்ச்சியால் அவதிப்படும் நெல்லை.!

தமிழகத்தில் ஐந்திணைகளையும் பெற்ற ஒரே மாவட்டம் நம் நெல்லை தான். அதில் நமது திருநெல்வேலி மாநகரம் மருத நிலத்தில் அதாவது வயலும் வயல் சார்ந்த பகுதியில் வருகிறது. நம் நெல்லை தமிழகத்தின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றாக இருந்தாலும் விவசாயம் செழிக்கும் நகரமாகவும் உள்ளது. நகரத்தின் நடுவே பாயும் தாமிரபரணியும் பல வாய்க்கால்களும் நம் நெல்லையை பசுமையாகவும் குளுமையாகவும் வைக்கின்றன. ஆனால் இந்த நிலை வேகமாக மாறிவருகிறது. ஆய்வு முடிவில் அதிர்ச்சி: ராஜ் சந்தர் பத்மநாபன் மற்றும் அவித் பொவ்மிக் என்ற இரு சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் நம் நெல்லை அசுர வேகத்தில் நகர்மயமாகி வருவது தெரியவந்துள்ளது. 2007 மற்றும் 2017 இடையிலான பத்து ஆண்டுகளை அவர்கள் கணக்கில் எடுத்துள்ளனர்.  இந்த பத்து ஆண்டுகளில் நெல்லையின் நிலப்பரப்பு பல மாற்றங்களை சந்தித்துள்ளது. நெல்லையில் வீழும் விவசாயம்: இந்த பத்து ஆண்டுகளில் நெல்லை மாநகரின் விவசாய நிலங்கள் 59% குறைந்துள்ளதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. விளைவாக விவசாயத்திற்கு லாயக்கற்ற நிலங்கள் 12.5% அதிகரித்துள்ளது. பசுமையை இழக்கிறது நெல்லை: ம...