பெருமைமிகு நெல்லை மாநகரம்:
சுதந்திரத்திற்கு முந்தைய சென்னை ராஜதானியில் அதிக நகரங்களை கொண்டிருந்த ஜில்லா என்ற பெருமை நம் திருநெல்வேலி ஜில்லாவிற்கு இருந்தது. நம் நெல்லை அடிப்படையில் இரட்டை நகரம் அல்ல. முப்பெரும் நகரம்.! ஆம், திருநெல்வேலி,பாளையங்கோட்டை,மேலப்பாளையம் என மூன்று நகரங்களை உள்ளடக்கியது தான் திருநெல்வேலி மாநகரம்.
சிறப்பான உட்கட்டமைப்பு:
தமிழகத்தில் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டிருக்கும் நகரங்களுள் நெல்லை முக்கியமானது. தமிழகத்திலேயே மிகக் குறைந்த மக்கள் நெருக்கடியைக் கொண்ட மிகப் பெரிய நகரமாக இருப்பது நெல்லை மாநகரம். பரப்பளவில் சென்னை,கோவை,மதுரைக்கு அடுத்து மிகவும் பரந்து விரிந்த நகரமாக இருப்பது நெல்லை மாநகரம்.
முக்கிய சந்திப்பு:
தமிழ்நாட்டில் மதுரைக்கு தெற்கே மிகப்பெரிய போக்குவரத்து சந்திப்பாக நம் திருநெல்வேலி இருக்கிறது. ரயில், சாலை என இரண்டு வழிகளிலும் மிகப் பெரிய சந்திப்பாக இருப்பது நம் திருநெல்வேலி.
பொதிகை மலையில் இருந்து இருபிரிவாக பிரிந்து வரும் தாமிரபரணி, திருநெல்வேலிக்கு அருகிலிருக்கும் சீவலப்பேரியில் தான் ஒன்றாக இணைந்து பெருநதியாக விரிகிறது.
விமான நிலையம் - நீண்ட நாள் ஏக்கம்.!
இப்படி, ரயில், சாலை வழிகளில் தென்தமிழகத்தின் மிக முக்கிய சந்திப்பாக இருக்கும் திருநெல்வேலியில் சர்வதேச விமான நிலையம் ஒன்று இல்லாதது பெரும் குறையாக இருக்கிறது. இதனால், பெரும் கனவோடு தொடங்கப்பட்ட கங்கைகொண்டான், நாங்குநேரி பெருந்தொழில் வளாகங்கள் முன்னேறாமல் மூச்சுவாங்கி நிற்கின்றன. நம் தூத்துக்குடியில் விமான நிலையம் அமைந்திருந்தாலும் அது தென்தமிழகத்தின் மையப் பகுதியில் அமைந்திருக்கவில்லை. மேலும் அது உள்நாட்டு விமான நிலையமாகவே செயல்பட்டு வருகிறது. எனவே தென்தமிழகத்தின் மையப்பகுதியான நெல்லையில் ஒரு சர்வதேச விமான நிலையத்தை அமைப்பது அவசியத் தேவையாக மாறியிருக்கிறது.
எங்கு அமைக்கலாம்:
நெல்லை மாவட்டத்தில் நெல்லை-நாகர்கோவில் வழித்தடம் சர்வதேச விமான நிலையம் அமைக்க ஏற்ற பகுதியாக இருக்குமென கூறப்படுகிறது. சர்வதேச சுற விமான நிலையத்தால் விளையும் பயன்கள்:
1. தொழில் நகரங்களான கோவில்பட்டி, கங்கைகொண்டான், நாங்குநேரி,மகேந்திரகிரி இஸ்ரோ, ஐஎன்எஸ் கட்டபொம்மன் மற்றும் விரைவில் வரவுள்ள குலசை ராக்கெட் ஏவுதளத்திற்கு மையமான பகுதியாக நம் நெல்லை இருப்பதால் இங்கு சர்வதேச விமான நிலையம் அமைவது இந்த அமைப்புகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும்.
2. நெல்லையில் சர்வதேச விமான நிலையம் அமைந்தால், தென்தமிழகத்தின் சர்வதேச வான்வழி நுழைவு வாயிலாக நம் நெல்லை மாநகரம் உருமாறும்.
3. கங்கைகொண்டான், நாங்குநேரி பெருந்தொழில் மண்டலங்கள் வேகமான முறையில் வளர வாய்ப்பு ஏற்படும்.
4. தென் தமிழகத்தின் மையமான நெல்லையில் சர்வதேச விமான நிலையம் அமைந்தால் நெல்லை,தூத்துக்குடி,குமரி,தென்காசி,விருதுநகர் மாவட்ட மக்கள் மதுரைக்கோ, திருவனந்தபுரத்திற்கோ செல்லும் நிலை தவிர்க்கப்படும்.
5. சர்வதேச விமான நிலையத்தால் நெல்லை உலக முக்கியத்துவம் பெறும் என்பதால் தொழில் முதலீடும் அதிகரிக்க வழி ஏற்படும்.
6. உலக சுற்றுலா தலமாக திகழும் கன்னியாகுமரியில் விமான நிலையம் இல்லாத நிலையில் அம்மாவட்டத்தின் தேவையையும் நெல்லை விமான நிலையம் தீர்த்து வைக்கும்.
அமைவது நன்மை:
ஐந்திணையும் கொண்ட ஒரே மாவட்டம், வற்றாத நதியை கொண்ட ஒரே மாவட்டம், தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு நகரம், தமிழ்நாட்டின் மிக முக்கியமான வணிக நகரம் என்ற பெருமையை கொண்ட நெல்லையில் சர்வதேச விமான நிலையம் அமைவது காலத்தின் தேவையாகவே பார்க்கப்படுகிறது.
மேலும், நெல்லையை மையமாக கொண்ட தென் தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும் சர்வதேச வானூர்தி நிலையம் மிகவும் முக்கியமானது என்பதே உண்மை.
Comments
Post a Comment