காமரஜர் தீட்டிய கனவுத் திட்டம்.
தமிழ்நாடெங்கும் நீர்நிலைகளை கட்டியெழுப்பிய காமராஜர் தான் இந்த திட்டத்தை தீட்டியவர். 1962 ம் ஆண்டு கடனாநதி,ராமநதி என்ற இரு அணைத்திட்டங்களோடு ஜம்புநதி கால்வாய் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி பிறகு ஆட்சிப் பொறுப்பை இழந்தார். பின்னர் வந்த திமுக ஆட்சியில் இரு அணைகள் மட்டும் கட்டியெழுப்பப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
கைவிடப்பட்ட கால்வாய் திட்டம்:
அணை கட்டியாச்சு.. கால்வாய் எங்கடா.? என்பதைப் போல நீரை தேக்கி வைக்க மட்டும் அணையை கட்டிவிட்டு ஜம்புநதி கால்வாய் திட்ட்டத்தை கைவிட்டது தமிழக அரசு. பிறகு அதிமுக அரசு வந்தது. தென்னகத்தின் கோரிக்கைகள் கோட்டைக்கு பறந்தன. நிறைவேற்றுகிறேன் என்று சொன்ன எம்ஜிஆர் மரணித்துப்போனார். பின்னர் திமுக, அடுத்து அதிமுக என ஆட்சிகள் மாறினாலும் இங்கே காட்சிகள் மாறிய பாடில்லை. வருடாவருடம் மழைப்பொழிவதும் ஆளுக்கு முந்தி கடனா ராமநதிகள் நிரம்புவதும் வெள்ளநீர் வீணாக கடலுக்கு செல்வதும் வாடிக்கையாகி விட்டது. கால்வாய் திட்டத்திற்கான மதிப்பீடும் பல மடங்கு அதிகரித்து விட்டது.
காலியாகும் கிராமங்கள்.!
கால்வாய் வரும் வரும் என்று இரு தலைமுறையாய் காத்திருந்த மக்கள் பிழைப்பு தேடி கொஞ்சம் கொஞ்சமாக ஊரை காலி செய்து வருகிறார்கள். இதிலும் உச்சகட்டமாக சில நாட்களுக்கு முன்பு இவ்வூர் இளைஞர்கள் கால்வாய் தாருங்கள். இல்லாவிடில், எங்களை கருணைக் கொலை செய்துவிடுங்கள் என கலெக்டரிடம் மன்றாடியுள்ளனர்.
கங்கையையும் காவிரியையும் இணைக்க திட்டம் போடும் நமது சர்கார் அருகருகே அமைந்துள்ள இரு அணைகளை இணைத்து வறண்ட பாவூர்,கடையம் சுற்றுவட்டாரங்களை வாழ வைக்க வேண்டுமென்பது இப்பகுதி மக்களின் பழம்பெரும் கோரிக்கை..!
பாலைவனத்தில் பாலை வார்க்குமா அரசு?
Comments
Post a Comment