அழகும் பழமையும் மிக்க நம் நெல்லை டவுணில் பரந்து விரிந்து இருப்பது நயினார்குளம். நம் நெல்லை மாநகரத்தை வடக்கு நோக்கி வளர விடாமல் தடுத்து மேற்கு - கிழக்காக வளர வைத்ததில் இந்த நயினார் குளத்திற்கு மிக முக்கிய பங்கு உண்டு.
நெல்லையின் எழில்!
நெல்லை டவுணுக்கு கூடுதல் அழகு சேர்ப்பது நயினார்குளம். இந்த குளத்திற்கு நீரை தருவது திருநெல்வேலி கால்வாய். திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் தெப்பக்குளத்திற்கு தாமிரபரணி நீரை கொண்டுவரும் பொருட்டு சுத்தமல்லி தாமிரபரணி அணைக்கட்டில் இருந்து வெட்டப்பட்டது இக்கால்வாய்.
ஆரம்பத்தில் இந்த கால்வாயில் மிகவும் சுத்தமான நீர் தான் ஓடிக்கொண்டிருந்தது.
நாறி நாசமான நயினார்குளம்.
ஆனால் தற்போது கழிவு நீர் கலப்பினால் இந்த குளம் கடுமையாக மாசுபட்டுள்ளது.
நெல்லையின் மெரினா ஆகுமா?
இந்த குளத்தின் கரையோரத்தில் அமைந்துள்ள சாலை நம் நெல்லையின் அழகான சாலைகளுள் ஒன்று. வடக்கு தெற்காக சுமார் 1.5 கி.மீ தூரம் அமைந்துள்ள இச்சாலையில் பயணப்படும் போது நம் நெல்லையப்பர் கோவிலின் நான்கு கோபுரங்களும் கம்பீரமாக காட்சியளிக்கும். தூரத்தில் தெரியும் பொதிகை மலை அழகை இன்னும் கூட்டும். குற்றால சீசன் சமயங்களில் வெளிநாட்டு பறவைகளும் இந்த குளத்தில் வந்து குவியும்.
டவுண் நயினார் குளத்தை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு செவி கொடுத்தார் முன்னாள் எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன். அழகிய நடைபாதைகள், குளத்திற்குள் மிதக்கும் கட்டிடம் போன்றவை கட்டப்பட்டன.
ஆனால் அதற்கு பின்னர் எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது அந்த கட்டுமானங்கள் எல்லாம் சீரழிந்து சின்னாபின்னமாகி ஆகிவிட்டன.
ஸ்மார்ட் ஆகிறது நயினார்குளம்:
தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 38 கோடி ரூபாய் செலவில் நயினார்குளத்தை மேம்படுத்தும் திட்டத்தை மாநகராட்சி கையில் வைத்துள்ளது. படகு குழாம், மிதக்கும் ஹோட்டல் போன்ற சுற்றுலா வசதிகளும் அதில் இடம் பெறும் என தெரிகிறது.
மேலும் குளத்தின் கரையோரத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் லாரிகளுக்கு பிரத்யேக புதிய லாரி முனையம் பழைய பேட்டையில் அமைய உள்ளது.
மேற்கண்ட திட்டங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தும் பொழுது நெல்லையின் மெரினாவாக நம் நயினார்குளம் மேம்பட வாய்ப்பு உருவாகும்.
பணிகள் விரைந்து முடிந்தால் நலம் என்பதே நெல்லையர்களின் எண்ணம்.!
Comments
Post a Comment