நகரமயமாக்கலில் நாட்டிலேயே முன்னால் நிற்கும் மாநிலம் தமிழ்நாடு. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே இங்கு மாநகரங்கள்
செழித்து இயங்கியிருக்கினறன. பழங்காலத்தில் கொற்கை, மதுரை, பூம்புகார் என பல தமிழக நகரங்கள் வணிக ரீதியில் உலகோடு இணைக்கப்பட்டிருந்தன. இதனால், தமிழகத்தின் பல நகரங்கள்
அன்றே உலகமயமாக்கலுக்கு பழகிப்போனது. அதை மிகச் சரியாக பயன்படுத்திக்கொண்ட பிராந்தியங்களில் நம் நெல்லை தனித்துவமானது. ஆங்கிலேயர்களின் வருகைக்கு பின்னர் வணிக ரீதியாக மட்டுமின்றி பல துறைகளிலும் நெல்லை புதுப்பொலிவு பெற்றது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நம்மை தேடி வந்த வாய்ப்புகள் அனைத்தையும் நாம் வெகு அழகாக சுவீகரித்துக் கொண்டோம்.
போக்குவரத்து:
சாலை மார்கமாக மட்டுமே போக்குவரத்து வசதிகளை பெற்றிருந்த நெல்லை மாவட்டத்திற்கு இருப்பு பாதைகளை அமைத்து கொடுத்தது பிரிட்டிஷ் பேரரசு. கேரளத்தின் கொல்லத்தில் இருந்து நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது அவர்களின் ஆகப்பெரும் சாதனை. மலை, சமவெளி பகுதிகளை கடந்து இரு கடல்களையும் இணைக்கும் அசாதாரண திட்டம் அது. இந்த திட்டத்தால் தூத்துக்குடி துறைமுகம் பெரு வளர்ச்சி அடைந்து தற்சமயம் நாட்டின் முன்னணி துறைமுகங்களுள் ஒன்றாக திகழ்கிறது. மேலும் நெல்லையில் விளைந்த விவசாய பொருட்கள் கேரளாவை அடையவும் இப்பாபாதை பெருமளவு பயன்பட்டது. இனியும் பயன்படப்போகிறது.
கல்வி:
தமிழும் சைவமும் தழைத்து ஓங்கியிருந்த திருநெல்வேலி மாநகரில் சாலை தோறும் கல்வி நிலையங்களை துவங்கி ஆன்மீக நகரத்தை ஆக்ஸ்போர்டாகவும் மாற்றினார்கள் ஆங்கிலேயர்கள். அவர்கள் ஏற்படுத்திய கல்வி நிலையங்கள் தென் தமிழகத்தை அறிவொளி வீசும் பகுதியாக மாற்றின. இன்று கன்னியாகுமரி,தூத்துக்குடி முதலிய மாவட்டங்கள் கல்வி வளர்ச்சியில் முன்னால் நிற்க இக்கல்லூரிகளின் பங்கு அளப்பறியது.
விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த நெல்லை மக்கள் இதன்மூலம் கல்வி கற்று வெளியூர்களில் தற்போது கலக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
நிர்வாகம்:
ஆங்கிலேய ஆட்சியின் போது நம் திருநெல்வேலி அவர்களின் ராணுவ தலைநகரமாக இருந்தது. திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு மாபெரும் ஜில்லாவும் செயல்பட்டுள்ளது. கிராமங்கள் அதிகமிருந்தாலும் ஏராளமான நகர்ப்புறங்களையும் நம் திருநெல்வேலி பெற்றிருந்தது. சுதந்திரம் கிடைத்த நேரத்தில் தமிழ்நாட்டிலேயே அதிக நகரங்களை உள்ளடக்கிய மாவட்டமாக நம் திருநெல்வேலி திகழ்ந்திருக்கிறது.
இப்படி ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் நம் திருநெல்வேலி பல விதங்களில் பலனடைந்தது.
ஆனால் , அதற்கு நிகராக ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய பல ஆளுமைகள் ஒய்யார நடை போட்டதும் இதே திருநெல்வேலி மண்ணில் தான்..!
Comments
Post a Comment