பதவியில் உட்கார்ந்த ஒரே ஆண்டிலேயே சேலத்துக் காரரான தமிழக முதல்வர் பழனிச்சாமி தன் ஊருக்கு விமான சேவையை கொண்டுவந்திருக்கிறார்.
மேலும் சேலத்தில் பஸ் போர்ட் அமைக்கப்படும் என்றும், பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில் பசுமை சாலைகளை அமைக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார்.
வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது என்று மத்திய அரசை நோக்கி குரல் எழுப்பினார் அப்போதைய தமிழக முதலமைச்சர் அண்ணா. ஆனால் இந்த வார்த்தை தற்போது தமிழ்நாட்டிற்கு மிகச் சரியாக பொருந்திப் போகிறது.
காங்கிரஸை வீட்டிற்கு அனுப்பி ஆட்சிக்கட்டிலில் தி.மு.க ஏறியதில் இருந்தே தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி,குமரி முதலிய மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளன.காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட அணை, மில் என்று காமராஜரின் பெயரோடு தான் அனைத்து வரலாறுகளும் இங்கு உலா வருகிறது.
பின்னர் வந்த அதிமுக ஆட்சியிலும் இதே போக்கு தொடர்ந்தது. விளைவு விவசாயத்தை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய நிலை திருநெல்வேலி மக்களுக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஆண்டுக்கு பல வன்முறைச் செயல்கள் தென்மாவட்டங்களில் அதிகரித்தது.
பல ஆண்டுகளுக்கு முன்பு தென்மாவட்டங்களில் நடந்த சாதி கலவரங்கள் அகில இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது நடந்தது தி.மு.க ஆட்சி. கலவரங்கள் குறித்து ஆராய குழு ஒன்றை அரசு அமைத்தது. அதற்கு சமீபத்தில் காலமான ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி திரு. ரத்தினவேல் பாண்டியன் தலைமை வகித்தார். அவரின் அறிக்கை தென் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என வலியுறுத்தியது.
அதைத் தொடர்ந்து நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானிலும் நாங்குநேரியிலும் சிறப்பு பொருளாதார மண்டலங்களை அரசு அமைத்தது.
திருநெல்வேலியின் துர்பாக்கியம், அந்த திட்டம் அரசியல் காரணங்களால் செயல்பட முடியாமல் முடங்கியுள்ளது.
அரசின் ஓரவஞ்சனை:
திருநெல்வேலிக்கு பல திட்டங்கள் கிடைத்தும் அதை செயல்படுத்த முடியாத நிலை நீடிக்கும் போது அரசின் உயர் பதவிகளில் அமரும் வெளியூர் காரர்கள் அவரவர் ஊர்களுக்கு தேவையானதை சிறப்பாக செய்கிறார்கள்.
தற்போதைய ஆளும் கட்சியை எடுத்துக்கொண்டால் திருநெல்வேலியை சேர்ந்த பலர் ஆட்சியில் மிக முக்கிய பங்காற்றுகிறார்கள். 4 எம்.பிக்கள், ஆளுமைமிக்க அரசியல்வாதிகளான பி.ஹெச் பாண்டியன், அவரது மகன் என அரசுக்கு மிக நெருக்கமாக இருக்கிறார்கள் நம்மூர் காரர்கள்.
அப்படியிருந்தும், நெல்லைக்கு தேவையான திட்டங்களை அவர்கள் கேட்டு பெறாமல் இருப்பது புதிராக இருக்கிறது. தற்போது முதல்வர் தனது சொந்த ஊருக்கு அதிகம் செய்வதை பார்த்தாவது நம்மவர்கள் திருநெல்வேலிக்கான திட்டங்களை பெறவில்லையானால், ஆண்டவானாலும் நம்ம திருநெல்வேலியை காப்பாற்றமுடியாது.!
Comments
Post a Comment