இதோ, மார்ச் மாதம் முடிந்து ஏப்ரல் மாதம் பிறக்கப்போகிறது. நம்ம ஊர்தான் இயற்கைக்கு மிகவும் பிடித்த ஊராச்சே. மழை பெய்தாலும் பெருமழை பெய்யும். வெயில் அடித்தாலும் வாட்டியெடுக்கும். பாளையங்கோட்டை ஜெயிலுக்கு மட்டுமல்ல வெயிலுக்கும் பேமஸ். இப்படி பெருமைகள் பல இருந்தாலும் அதை நாம் எந்த அளவுக்கு பயன்படுத்துகிறோம் என்றால் பெரும் கேள்விக்குறிதான் மிஞ்சுகிறது.
நம் திருநெல்வேலி மாவட்டம் இயற்கையிடம் வாங்கிய பரிசுகள் மிக மிக அதிகம். தமிழ்நாட்டில் இரு பருவ மழைக்காலங்களிலும் மழைப் பெறும் மாவட்டங்களில் நம் திருநெல்வேலியும் ஒன்று. தென்மேற்கு பருவமழையால் குற்றாலம் பெருக்கெடுத்தால், வடகிழக்கு பருவமழையால் பாபநாசம் சீறிப் பாயும். இதனால் தாமிரபரணி வற்றாத ஜீவநதியாக தவழ்ந்து தென்மாவட்டங்களை செழிக்க வைக்கிறது.
கடந்த ஆண்டும் இதேப் போல நம் மாவட்டம் அபரிமிதமாக மழைப் பொழிவை பெற்றது. தமிழ்நாட்டிலேயே அதிக மழை பெற்ற மாவட்டம் திருநெல்வேலி என வானிலை மையம் அறிவித்தது. விளைவு அணைகளில் நீர்மட்டம் நிரம்பி வழிந்தது. தண்ணீர் வீணாக கடலுக்கு சென்றது. இதோ இப்போது மார்ச் மாதத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நெல்லையில் தலைக்காட்ட தொடங்கியுள்ளது.
நீர்மேலாண்மையில் பின்னடைவு:.
திருநெல்வேலி மாவட்டம் அதிக மழைப்பொழிவை பெற்றாலும் அதை சேமித்து வைப்பதில் நாம் மிகவும் பின்தங்கியே இருக்கிறோம். ஆம், திருநெல்வேலி மாவட்ட தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள் பலவும் மன்னர்கள் மற்றும் ஆங்கிலேய ஆட்சியில் கட்டப்பட்டவை. எனவே புதிதாக தடுப்பணைகளை கட்டி நீரை சேமிக்க வேண்டியது தற்சயம் அவசியமாகியுள்ளது. அடுத்ததாக பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளின் கொள்ளளவை அதிகரிக்க வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. அப்படி செய்தால் மழைக் காலங்களில் அணைகள் விரைவில் நிரம்பி உபரி நீர் வீணாக வெளியாவது தடுக்கப்படும். தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் அணையை தாண்டி ஆண்டுக்கு ஆண்டு பல டி.எம்.சி தண்ணீர் கடலுக்கு செல்கிறது. இதையும் தடுக்க நாம் நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கிறோம். இவற்றையெல்லாம் எடுத்தால் திருநெல்வேலி மாவட்டம் ஆண்டுமுழுவதும் செழித்திருக்கும் சொர்க்க பூமியாக திகழும்..! அந்த நாள் என்று வருமோ.?
Comments
Post a Comment