தமிழகத்தில் பிறந்து தமிழகத்தை மட்டுமே செழிக்க வைத்து பின் தமிழக கடல்பரப்பிலேயே கலந்து விடும் ஒரே நதி தாமிரபரணி. வருடத்தின் அனைத்து நாட்களிலும் தண்ணீர் ஓடும் மிகச் சில இந்திய நதிகளில் இதுவும் ஒன்று. காவிரி, முல்லைப்பெரியார் போல பிற மாநிலத்திடம் நம் தமிழர்களை கையேந்த விடாத அற்புத நதி.இதன் மொத்த நீளம் 120 கி.மீ தூரம்.
பிறப்பு:
செழிப்பு மிகுந்த மேற்கு தொடர்ச்சி மலையில் பூங்குளம் என்னும் பகுதியில் தாமிரபரணி நதி பிறக்கிறது. பின்னர், நூற்றுக்கணக்கில் கிளைநதிகள் ஒன்று சேர்ந்து பாபநாசம் அணையை அடைகிறது. 13 கி.மீ வடக்கு நோக்கியே மலை மீது பயணிக்கும் தாமிரபரணி பாபநாசத்தில் வந்து கிழக்காக திரும்புகிறது.
அதன் பின்னர் விக்கிரமசிங்கபுரம்,அம்பை, கல்லிடைகுறிச்சி, திருப்புடைமருதூர், சேரன்மகாதேவி, சுத்தமல்லி, கோபாலசமுத்திரம் முதலிய ஊர்களை கடந்து திருநெல்வேலலியை அடைகிறது. பின்னர் நெல்லையில் வடக்கு நோக்கி திரும்பி பின்னர் கொங்கராயங்குறிச்சியில் மீண்டும் தெற்காக திரும்பி ஆதிச்சநல்லூரில் கிழக்காக திரும்புகிறது. பின்னர் ஸ்ரீவைகுண்டம் வழியாக புன்னைக்காயலில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.
சிறப்புகள்:
தமிழ்நாட்டில் ஓடும் ஒரே ஒரு வற்றாத நதி இதுதான். தண்ணீரின் சுவை வார்த்தைகளால் விவரிக்க முடியாதபடிக்கு இருக்கும். ஓடி வரும் வழியில் பல லட்சம் விளைநிலங்களை செழிக்க வைக்கிறது. அதனால் தான் நெல்லை மாவட்டம் தமிழகத்தின் 2 வது நெற்களஞ்சியமாக திகழ்கிறது. பாரம்பரியமிக்க பல நூறு கோவில்கள் இதன் கரைகளில் அமைந்துள்ளன.
ஆதிச்சநல்லூர் என்ற இடத்தில் ஆற்றின் கரையோரத்தில் நடந்த அகழாய்வில் 2000 ஆண்டுகள் பழமையான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் கொற்கை என்னும் துறைமுகம் செயல்பட்டு வந்துள்ளது. அன்றைய பாண்டியர்களின் தலைநகரமாக அந்த ஊர் செயல்பட்டது. பின்னர் கடல் கொந்தளிப்பால் மதுரைக்கு தலைமையிடத்தை பாண்டியர்கள் மாற்றினார்கள்.
இப்படி நெல்லை மண்ணை வாழ்வாங்கு வாழவைத்த தாமிரபரணியின் இன்றைய நிலைமை கவலையளிக்கும் வகையில் உள்ளது. நெல்லையை வாழ வைக்க பிறந்த அந்த நதியை நெல்லை மாநகரமே அதிகமாக மாசுபடுத்துகிறது. கழிவுகளை அதிகமாக நதியில் சேர்ப்பதால் நதி கொஞ்சம் கொஞ்சமாக செத்து கொண்டிருக்கிறது. நாம் பருகும் தாமிரபரணி தண்ணீர் அமிர்தமாக இருக்கிறது. ஆனால், நம் எதிர்கால தலைமுறையும் அந்த சுவையை பெற என்ன செய்ய போகிறோம் நாம்...?
நம்மை வாழ வைத்த நாமே சாகடிக்கிறோம். இது முறைதானா..?
சிந்திப்போம்.! தாய் தாமிரபரணியை காப்போம்!
Mukkudal la odalaya ingatha ya 3river join aguthu Atha yen yaru solla matringa
ReplyDelete